Articles

பிரதமர் இன்றிரவு ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை

பிரதமர் இன்றிரவு ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை: நேற்று குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட்ட 13 பேரின் உடல்கள் இன்றிரவு (டிச.,09) இராணுவத்துவரின் பாதுகாப்பில் டில்லி பாலம் விமான நிலையம் சென்றடைகிறது. அங்கு, பிரதமர் மோடி வீரர்களின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

கோவை மாவட்டம் சூலுாரில் இருந்து நேற்று (டிச.,08) காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், மதியம் காட்டேரி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், முப்படை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் குன்னூர் வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டது. அவர்களது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இவர்கள் உடல்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் சாலை மார்க்கமாக சுமார் 85 கிலோ மீட்டர் துாரமுள்ள சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மீது மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சி130 சூப்பர் ஹெர்குலிஸ் என்ற தனி விமானம் மூலம் டில்லி கொண்டு செல்லப்பட்டது. இவர்களது உடல்கள் இரவு 8 மணியளவில் டில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு சென்றடையும் என்றும், இரவு 9 மணியளவில் பிரதமர் மோடி, வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூன்று படைகளின் தளபதிகள் இந்நிகழ்வில் பங்கேற்று உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

Related Articles

Back to top button